

சென்னை: திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது; சென்னையில் நாளை (ஜூலை 27) நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில்மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக இடைக்காலபொதுச் செயலாளராக பழனிசாமிபொறுப்பேற்ற பிறகு சென்னையில்நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம்என்பதால், மிகுந்த எழுச்சியோடுஆர்ப்பாட்டத்தை நடத்துவதுதொடர்பாக, சென்னையில் உள்ள 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
இக்கூட்டத்தில் திமுகவை எதிர்த்து 27-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்காமல் பழனிசாமி சென்னை திரும்பினார்.
பிரதமர் தமிழகம் வரும்போது அரிசி மற்றும் பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், விருகை ரவி, கந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.