Published : 26 Jul 2022 06:13 AM
Last Updated : 26 Jul 2022 06:13 AM

சென்னையில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் எங்கு அமையும்? : மத்திய அமைச்சரை சந்திக்கிறார் தங்கம் தென்னரசு

சென்னை

சென்னையில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்ய, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் டெல்லியில் இன்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும், விமான நிலைய விரிவாக்கத்துக்கான இடத்தேவையை கருதியும், சென்னை அருகில் 2-வது புதிய பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விமான நிலையம் அமைக்க சாத்தியமுள்ள இடத்தை தேர்வுசெய்வதற்கான பணி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் சென்னை அருகில் சில இடங்களை தேர்வு செய்து அளித்தது. அந்த இடங்களில் விமான நிலையத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் கோரப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இறுதியாக, புதிய விமான நிலையம் அமைக்க, திருவள்ளூர் மாவட்டம் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் ஓர் இடத்தை தேர்வு செய்து விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை சந்தித்து விமான நிலையம் அமைப்பதற்கான ஓர் இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில், இடத்தை இறுதிசெய்து, அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x