Published : 26 Jul 2022 07:30 AM
Last Updated : 26 Jul 2022 07:30 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்க வளாகத்தில் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் நிறுவப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம்தேதி முதல் ஆக. 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், 188 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.இதற்காக, பிரம்மாண்ட போட்டி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்க வளாகத்தில் பல்வேறு அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில்,செஸ் போட்டிக்காக தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தம்பி’ சிலைகள், லட்சினை மற்றும்செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் காய்களின் சிற்பங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செஸ் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களை வரவேற்கும் வகையில்,போட்டி அரங்க வளாகத்தின் நுழைவு சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்ட கம்பங்கள் வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. மேலும், அரங்க நுழைவு பகுதியின் சாலைகளில் செஸ் போர்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதேபோன்று, போட்டி நடைபெறும் சொகுசு விடுதி அருகே கிழக்குகடற்கரை சாலையின் இருபுறமும்செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பர பதாகைகள் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ளன. இதை சுற்றுப்புற கிராமமக்கள் மற்றும் ஈசிஆரில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
4 ஆயிரம் போலீஸார்
இதனிடையே போட்டி அரங்கம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கும்விடுதிகள் உட்பட மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நிறைவடையும் வரை 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக திருவாரூர், தஞ்சாவூர், சேலம், நாகர்கோவில், கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாமல்லபுரத்துக்கு போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக, மாமல்லபுரத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 20 திருமண மண்டபங்கள்தயார்படுத்தப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும்6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் 10 நடமாடும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியானது 9 மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் போலீஸாருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் கேமராக்கள்
இதனிடையே மாமல்லபுரம் முதல் கோவளம் மற்றும் கடப்பாக்கம் வரையில் உள்ள கடற்கரை பகுதிகளையும் போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளையும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட எஸ்.பி.சுகுணாசிங் நேற்று தொடங்கிவைத்தார். இந்தப் பணிக்காக 5 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பி தெரிவித்தார். மாமல்லபுரம் டிஎஸ்பிஜகதீஸ்வரன், போலீஸார் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT