Published : 26 Jul 2022 07:15 AM
Last Updated : 26 Jul 2022 07:15 AM
தாம்பரம்: தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து தாம்பரம், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆளும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏக்கள் ப.தன்சிங், கனிதாசம்பத் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிட்லபாக்கம் ராஜேந்திரன், "பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாகக் கடலில் கலக்கும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ரூ.81 கோடியை செலவிடும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி பற்றாக்குறையாக உள்ள இந்த நிலையில், இந்தச் செலவு தேவையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருக்கழுகுன்றம்
திருக்கழுகுன்றத்தில் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆளும் திமுக அரசு மீது குற்றம்சாட்டி கண்டன வாசங்கள்எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT