Published : 25 Jul 2022 06:50 PM
Last Updated : 25 Jul 2022 06:50 PM

சென்னை மாநகராட்சி Vs தமிழக அரசு - அம்மா உணவக திட்டத்தில் நடப்பது என்ன?

சென்னை: அம்மா உணவகத்தை அறக்கட்டகளை அமைத்து, அதன் மூலம் நிர்வகிக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், இதற்கு விளக்கம் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் பதில் எழுதப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள நகர்புறங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு வரை மாநகராட்சிக்கு ரூ.468 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், விற்பனை வருவாயும் குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில், நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகங்களை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும், அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அறிக்கையின்படி சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவங்களை மேம்படுத்த நிதி திரட்ட ஓர் அறக்கட்டளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பல்வேறு அமைப்புகளின் நிதியை பெற்று, இந்த நிதி மூலம் அம்மா உணவகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனங்கள் சட்டப் பிரிவு 8-ன் படி அம்மா உணவக அறக்கட்டளை (Amma Unavagam Foundation) அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாறியவுடன் அம்மா உணவகங்கள் மூடப்படும் என்று தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்த தமிழக அரசு, தொடர்ந்து அம்மா உணவகம் செயல்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், தற்போது அம்மா உணவக அறக்கட்டளையை (Amma Unavagam Foundation) தொடங்கி, இதன் மூலம் அம்மா உணவகத்தை நடத்த வேண்டும் என்று மாநகராட்சியிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சில கேள்விகள், தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

அரசு கூறியது என்ன?

  • அம்மா உணவக அறக்கட்டளையை (Amma Unavagam Foundation) தொடங்க வேண்டும்
  • அறக்கட்டளை மூலம் சிஎஸ்ஆர் நிதியை பெற்று அதன் மூலம் அம்மா உணவத்தை நடத்த வேண்டும்.
  • எவ்வளவு நிதி கிடைக்கிறது என்பதை பொறுத்து தமிழக அரசு நிதி உதவி அளிக்கும்.

மாநகராட்சி கோரிய விளக்கம் என்ன?

  • அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
  • போதியை நிதி கிடைக்காவிடில் தமிழக அரசு நிதி உதவி அளிக்குமா?
  • அம்மா உணவகத்தை நடத்த தமிழக அரசு தொடர்ந்து நிதி உதவி அளிக்குமா?

இவ்வாறு மாநகராட்சி மற்றும் தமிழக அரசு இடையில் அம்மா உணவகம் தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x