திருவள்ளூர் மாணவி மரணம் | “ஆரம்பகட்ட விசாரணை நிறைவு;  சிபிசிஐடி இனி விசாரிக்கும்” - டிஐஜி சத்யபிரியா

திருவள்ளூர் மாணவி மரணம் | “ஆரம்பகட்ட விசாரணை நிறைவு;  சிபிசிஐடி இனி விசாரிக்கும்” - டிஐஜி சத்யபிரியா
Updated on
1 min read

திருவள்ளூர்: “திருவள்ளூர் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று காவல் துறை டிஐஜி சத்யபிரியா கூறியுள்ளார்.

காவல் துறை டிஐஜி சத்யபிரியா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புகார் வந்தது. தூக்கிட்டு தற்கொலை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக இன்று காலை உடனடியாக வந்த உள்ளூர் போலீசார், காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர், அதன்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சிபிசிஐடி இனி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிடுவர். சம்பந்தப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்றேகூட மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்படும்.

மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் அனைவரும் இங்குதான் உள்ளனர். அவர்களிடம் அனைத்தையும் எடுத்து கூறியுள்ளோம். இதில் வேறு எந்தக் குழப்பமும் கிடையாது.

காவல் துறையின் வேண்டுகோள் என்னவென்றால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். ஒரு சிலர் வேறு வேறு விதமாக இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். எனவே, ஊடகங்கள் சரியான செய்திகளை தெரியப்படுத்துங்கள்" என்று அவர் கூறினார்.

விசாரணை அதிகாரி நியமனம்: திருவள்ளூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக, திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in