

சென்னை: இந்திய குடியரசுத் தலைவராக வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதம்: "இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.