

மழை காலம் நெருங்கும் நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதன்மை அமர்வு, தாமாகவே முன் வந்து விசாரித்து, ''15 தினங்களுக்குள் பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும்'' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க 2 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என தமிழக கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் மக்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும், காவிரி டெல்டா மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு பெருந்துயரம் ஏற்பட்டது.
அப்போது தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 3 லட்சத்து 82 ஆயிரத்து 768 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகள் சேதமடைந்தன. 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகள் மழை, வெள்ள நீரால் சூழப்பட்டன. டிசம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை 5 நாள்களுக்கு சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. எண்ணற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 347-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத இழப்புகளையும், பாதிப்புகளையும் அதிமுக அரசும், முதல்வரும் மறந்திருக்க முடியாது.
எனவே, இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்க முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைப்பது அவசியமாகும்.
ஆனால், தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டுமல்ல, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும் செயலிழந்துள்ளது. 'தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016' வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கான மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்துக்குரியது. மழை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு உடனடியாக மாநில பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.