Published : 25 Jul 2022 07:50 AM
Last Updated : 25 Jul 2022 07:50 AM
சென்னை: தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடந்த 32-வது சிறப்பு மெகா முகாமில் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை போடப்படுகிறது.
அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் வகையில் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வாரம்தோறும் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம் நடத்தப்பட்டது. பின்னர், மாதந்தோறும்ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8,ஜூன் 12, ஜூலை 10 ஆகிய நாட்களில்தமிழகம் முழுவதும் ஒரு லட்சம்இடங்களில் சிறப்பு மெகா முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 32-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த சிறப்பு மெகா முகாமில் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதார, முன்களப் பணியாளர்கள், 2 தவணை போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மையங்களில் பூஸ்டர் தவணை இலவசமாக போடப்படுகிறது. 18-59 வயதினருக்கான பூஸ்டர் தவணை, தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தில் செலுத்தப்பட்டுவந்தது. அதனால், பூஸ்டர்தவணை போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்த நிலையில், 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு 18-59 வயதினருக்கு நாடு முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. கடந்த 15-ம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் சுமார் 3.5 கோடி பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடவேண்டி உள்ளது. 75 நாட்களுக்குள் அவர்களுக்கு தடுப்பூசிபோடுவதற்காக, இந்த மாதத்தில்2-வது முறையாக நேற்று முகாம்நடத்தப்படுள்ளது. 75 நாட்களுக்குள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசிபோடும் விதமாக கூடுதல் முகாம்கள் நடத்தப்படும்.
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (ஜூலை 25) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT