Published : 25 Jul 2022 06:18 AM
Last Updated : 25 Jul 2022 06:18 AM

மக்கள் வரிப் பணத்தில் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதா? - விஜயகாந்த் கேள்வி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் வரிப் பணத்தில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை என தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னைமெரினா கடலில் 134 அடி உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை தமிழக அரசு அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.

இதற்கு செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மக்கள் அதை வரவேற்பார்கள்.

ஏற்கெனவே தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலையில், ரூ.80 கோடியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அவசியமற்றது.

நினைவுச் சின்னம் வேண்டும் என்றால், மக்கள் வரிப் பணத்தைவீணடிக்காமல், திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தைவைத்து நினைவுச் சின்னத்தை அமைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x