Published : 25 Jul 2022 07:16 AM
Last Updated : 25 Jul 2022 07:16 AM
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தங்கத்தில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிலை கடத்தல் தடுப்புபிரிவில் இருந்து சிவகாஞ்சி காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவன், பார்வதி, முருகன்ஆகியோர் சேர்ந்து இருக்கும் இந்த சிலையில் ஏற்பட்ட சேதம் காரணமாக வேறு ஒரு தங்க சிலையை முத்தையா ஸ்தபதி வடித்துஇருந்தார்.
இதற்காக 100 கிலோ தங்கம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சிலையில் துளிஅளவு கூட தங்கம் இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் கடந்த 2018-ல்வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி, திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீது நம்பிக்கை வைத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒப்படைத்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததைத்தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின்ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உடனடியாக சிவகாஞ்சி போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிமுடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT