

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தில் போட்டியிட மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதற்குரிய ஆவணங்களை மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
கடந்த சில தேர்தல்களில், மதிமுக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடியுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி தந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.