

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயில் மற்றும் வலம்புரி விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை மாணவர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து ஆய்வு செய்துள்ளார். கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் காணப்படும் 2 கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளனர்.
இது குறித்து உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் கூறியதாவது: கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோயிலில் இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டு. இதில் ராஜராஜ சோழனின் காந்தளூர் சாலை போர் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் பாண்டியநாடு சோழர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் இருந்துள்ளனர். கொங்குராயன் என்ற சிற்றரசன் ஸ்ரீவைகுண்டம் பகுதியை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவரது காலத்தில் இந்த கல்வெட்டு எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வலம்புரி விநாயகர் கோயிலின் தரைதளத்துக்கும் மேலாக ஆற்று மணல் சூழ்ந்து காணப்படுகிறது.
கருவறையைச் சுற்றியுள்ள ஆற்று மணலை அகற்றினால், அதில் பல்வேறு கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.