Published : 24 Jul 2022 04:55 AM
Last Updated : 24 Jul 2022 04:55 AM
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை, பழனிசாமியின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமி, கட்சியில் இருந்து ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கினார். தொடர்ந்து, அவரது அதிமுக எம்.பி. என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மக்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், மக்களவை தலைவருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அதிமுக தலைமை நிர்வாகிகள் சிலர், கட்சி ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி கடந்த ஜூலை 11-ம் தேதி கட்சி பொதுக்குழுவை கூட்டினர். இது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதால், அந்த நிர்வாகிகளை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கினேன். கட்சிக்கு எதிராக செயல்படும் இவர்களது நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில்எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தன்னை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக சுய பிரகடனம் செய்துகொண்ட பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து மக்களவை எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத்தை நீக்கி அறிவித்ததாக எனது கவனத்துக்கு வந்தது. பழனிசாமியின் பதவி செல்லாது. எனவே, எனது ஒப்புதல் இன்றி, அவரது பரிந்துரைகளை ஏற்க வேண்டாம். இவ்வாறு அதில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
வங்கி கணக்கை முடக்க வேண்டும்
ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதம்:
அதிமுக பொருளாளர் என்ற முறையில், பல்வேறு வங்கிகளில் உள்ள அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். இந்நிலையில், விதிகளை மீறி கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வங்கி கிளைகளில் பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். இது விதிகளுக்கு புறம்பானது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. தேர்தல் ஆணையத்திலும் புகார் தரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் முடிவு அறிவிக்கும் வரை அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்குமாறு, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுகவில் இருந்து பல்வேறு காரணத்துக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், மீண்டும் அவரவர் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர்’ என்று அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT