

சென்னை அய்யப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் பார்வதிநாதன்(37). இவர், தனது குடும்பத்தினருடன் காரைக்குடியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை பார்வதி நாதன் ஓட்டி வந்தார்.
கார் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே வந்தபோது, முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சோப்பு ஏற்றிச் சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில், பார்வதிநாதன், அவரது தாய் வசந்தா(68), இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கதிர்வேல்(71) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
பார்வதிநாதனின் மனைவி தெய்வானை(33), மகன் சேதுராம்(5), அண்ணன் சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேதுராமன்(43) ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.