Published : 24 Jul 2022 05:08 AM
Last Updated : 24 Jul 2022 05:08 AM
விருத்தாசலம்: சின்னசேலம் தனியார் பள்ளியில் சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெற்றுக்கொண்ட அவரது பெற்றோர், சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் நேற்று அடக்கம் செய்தனர். உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி. இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதிக் கட்டிடத்தில் 3-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, கடந்த 16-ம் தேதி உடலை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்தபோது, மாணவியின் பெற்றோர் பெற மறுத்து, தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை சிபிசிஐடி விசாரணைக் குழு முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை நடத்த கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்குழு முன்னிலையில், தமிழக அரசின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்தி முடித்தனர். மறு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரும் பெற்றோரால் உடல் பெறப்படவில்லை.
இதற்கிடையே உயர் நீதிமன்றம், உடலை நேற்று காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டதோடு, தவறும்பட்சத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியது. இதையடுத்து மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் தரப்பில் முன்வந்தனர்.
அனுமதி மறுப்பு
மாணவி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவியின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்கக் கூடும் என்பதால், உள்ளூர்வாசிகள் மற்றும் உறவினர்களுக்கும் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து வேப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதலே 12 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை 6.30 மணிக்கு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீமதியின் வீடு மற்றும் கிராமத்தைச் சுற்றிலும் டிஐஜி பாண்டியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவியின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி நிகழ்வில் அரசு சார்பில் அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சார் ஆட்சியர் சி.பழனி ஆகியோர் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், காங்கிரஸ் எம்எல்ஏ எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக எம்எல்ஏக்கள் அருண்மொழித் தேவன், செந்தில்குமார், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து மாணவியின் உடல் ஊர்வலமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம், ‘என் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை; இந்த அரசு நீதி வழங்க வேண்டும்’ என்று தனது வீட்டில் இருந்து இடுகாடு வரையிலும் கூறிக் கொண்டே வந்தார்.
உயிரியல் புத்தகத்துடன்...
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உயிரியல் பாடத்தை விருப்பமாக படித்து வந்தார். அதனால் புதைக்கும்போது அவருக்கு விருப்பமான 12-ம் வகுப்பு உயிரியல் பாடப் புத்தகம், எழுதுப் பொருட்களை அவரது உடலுடன் அடக்கம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT