

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு 3-வது நாளான நேற்று மட்டும் 31 ஆயிரத்து 726 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3 நாட்களில் 42 ஆயிரத்து 907 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளான நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 433 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கலின் 3-வது நாளான நேற்று, அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 82, ஒன்றிய கவுன்சில் வார்டு உறுப்பினருக்கு 334, கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 3 ஆயிரத்து 930, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 26 ஆயிரத்து 641 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நகர்ப்புறத்தில், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 112 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 136 மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 491 பேர் என மொத்தம் 31 ஆயிரத்து 726 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆயிரத்து 907 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.