

உதகை: வயநாட்டில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்காவை ஒட்டி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் ஒருவருக்கு ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி கூறியதாவது: வயநாடு மாவட்டத்தை ஒட்டி நீலகிரி மாவட்டதில் 10-க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடனோ அல்லது தீவிர காய்ச்சலுடனோ யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.
காய்ச்சல் இருந்தால் டெங்கு, டைபாய்டு உட்பட 5 வகை பரிசோதனை செய்யவும் வலியுறுத்தியுள்ளோம். காய்ச்சல், நுரையீரல் தொற்று உள்ளவர்களை நன்கு கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.