

திருச்சி: தமிழகத்தில் நீர்வளத் துறை திட்டமிட்டு செயல்பட்டால், தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் அ.வீரப்பன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர் சங்கத்தின் சென்னை மற்றும் திருச்சி கிளை சார்பில் தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் பொதுசெயலாளர் அ.வீரப்பன் தலைமை வகித்தார். பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்கள் ஆர்.பரந்தாமன், கே.மனுராஜ், ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் தி.த.சண்முகவடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பின்னர், அ.வீரப்பன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசின் நீர்வளத் துறை நீர்வளம் தொடர்பான தகவல்களை இணையதளங்களில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று கூறுவது தவறானது. தமிழகத்தில் உள்ள 88 நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள், 39 ஆயிரம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் உள்ள வண்டல் மண்ணை 2 மீட்டர் அளவுக்கு எடுத்து ஆழப்படுத்தினால், இன்னும் 300 டிஎம்சி தண்ணீரை நாம் சேமிக்க முடியும். இதன் மூலம் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை 1,500 டிஎம்சியாக உயர்த்தலாம்.
தமிழகத்தில் 925 மில்லி மீட்டர் மழை மூலம் 2,500 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இவற்றை சேமித்து வைக்கக்கூடிய கட்டமைப்புகள் இல்லை. இதை செயல்படுத்த வேண்டிய செயல்திட்டங்களை நாங்கள் அரசுக்கு கொடுத்துள்ளோம்.
காவிரியில் அதிக தண்ணீர் வரும்போது, கொள்ளிடம் வழியாக கடலுக்குச் செல்கிறது. இதை பயனுள்ள முறையில் பயன்படுத்த ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ளது போன்று நீரேற்று திட்டங்கள் மூலம் வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம்.
இதுபோன்று நாங்கள் தெரிவிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நீர்வளத் துறை திட்டமிட்டு செயல்பட்டால் 5 ஆண்டுகளுக்குள் தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
முல்லைப் பெரியாறு அணையின் 1886-ம் ஆண்டு ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது. இந்த அணை தமிழகத்துக்குச் சொந்தமானது, அதை நிர்வகிக்க, பராமரிக்க தமிழகத்துக்கே உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் உரிமை, அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லும் உரிமை உள்ளது. ஆனால், இவற்றுக்கு தமிழக அரசு கேரள அரசிடம் அனுமதி கேட்பது தேவையற்றது.
காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல், கர்நாடக அரசு தனது அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீரை வழங்கி வருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசு குடியரசுத் தலைவரிடம் அரசியல் சட்டம் 365-வது பிரிவின் கீழ் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் மணல் அள்ளக் கூடாது. அதற்கு பதிலாக செயற்கை மணல் அல்லது இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலையில் மணலை இறக்குமதி செய்து வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.