

பழநியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பழநி வந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், படிப் பாதையில் படி பூஜை செய்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர். அடிவாரம் பகுதியிலும், மலைக்கோயிலிலும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோயில் பாரவேல் மண்டபம்மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமானோர் திரண்டனர்.
இழுவை ரயில் பழுது
பழநி கோயிலில் ஏற்கெனவே பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் இயக்கப்படவில்லை. இதனால் இழுவை ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மொத்தம் உள்ள 3 மின் இழுவை ரயில்களில் ஒன்று நேற்று காலை பழுதானது.
இதனால் மீதம் உள்ள இரண்டு மின் இழுவை ரயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்றனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.