

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, ரயில் நிலையத்தில் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில்நிலையம் பயணிகள் கூட்டத்தால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலக நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில், ஆபாச வார்த்தைகளுடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருச்சி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாநகர காவல் தெற்கு துணை ஆணையர் தேவி தலைமையில் போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருடன் இணைந்து ரயில் நிலைய முகப்பு வாயில், பயணிகளின் காத்திருப்பு அறை, நடைமேடை, நடைமேம்பாலம் என பல்வேறு இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தினர்.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தண்டவாளம், கல்லுக்குழி நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் 3 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை-வாரணாசி செல்லும் தனியார் ரயிலில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.