“மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்ய ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?” - தமிழக பாஜக

மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
Updated on
1 min read

சேலம்: “மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?” என பாஜக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளும் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்தும், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை, உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பாஜகவினர் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடந்த ஆர்ப்பாட்டதுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றார்.

இதில் மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசும்போது, ”கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று ஊரடங்கால் பொதுமக்கள் பாதித்து, இயல்பு நிலை திரும்பிய நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சொத்து வரியை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், மாநில அரசு வரியை குறைத்துக்கொள்ள முன்வரவில்லை.

மத்திய அரசு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு காண வேண்டும் என்ற நோக்கில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியே கடிதம் எழுதியது. மின் கட்டணம் உயர்த்த நிர்பந்தித்து எந்தக் கடிதமும் எழுதவில்லை. திமுக அரசானது, மத்திய அரசு மீது குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா, மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் பாஜக சார்பில் தொடர்ந்து நடத்தப்படும். மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி கரூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார்.

போராட்டத்தில் பொதுச் செயலாளர் ஐ. சரவணன், நகர்ப்புற வளர்ச்சி பிரிவுத் தலைவர் அண்ணாதுரை, இளைஞர் அணி தலைவர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in