ஊர் மக்களின் ஒத்துழைப்போடு அமைதியாக இறுதிச் சடங்கு நடைபெற்றது: அமைச்சர் சி.வி.கணேசன்

ஊர் மக்களின் ஒத்துழைப்போடு அமைதியாக இறுதிச் சடங்கு நடைபெற்றது: அமைச்சர் சி.வி.கணேசன்

Published on

கடலூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் கிராம மக்கள், காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது" என்று தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, ராமலிங்கத்தின் மகளான மாணவியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒப்பைடக்கப்பட்டது. அதன்பின்னர், மாணவியின் உடல், அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துவந்து,பெரிய நெசலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் பார்வைக்காகவும், மாணவியின் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஏறக்குறைய 2 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு, பெரியநெசலூர் கிராம மக்களின் முழு ஒத்துழைப்போடு அமைதியாக, சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஆதரவோடும், ஒற்றுமையோடும், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும் மாணவியின் உடல் அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த கிராம மக்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவியின் இறப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நல்ல நீதி கிடைக்கும்" என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in