‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகை: தீவிரவாதிகள்போல நுழைந்த 4 பேர் சிக்கினர் - இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது

‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகை: தீவிரவாதிகள்போல நுழைந்த 4 பேர் சிக்கினர் - இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது
Updated on
1 min read

‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடல் வழியாக தீவிரவாதிகள் போல வேடமணிந்து வந்த 4 கமாண்டோ வீரர்களை போலீஸார் பிடித்தனர்.

2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அம்சமாக ஒவ்வோர் ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் அம்லா’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 14 கடலோர மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 2-வது பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதற்கு ‘சாகர் கவச்’ (கடல் கவசம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மத்திய கடலோர படை, கடற்படை, கடலோர பாதுகாப்புக் குழுமம், தமிழக போலீஸார் இணைந்து செயல்படுகின்றனர்.

‘மரைன் கமாண்டோ’ என்றழைக் கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங்களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சம்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை ‘ஆபரேஷன் அம்லா’ என்ற பெயரில் நடந்து வந்தது. தற்போது இதை ‘சாகர் கவச்’ என்று பெயர் மாற்றியுள்ளனர்.

நேற்று நடந்த ஒத்திகையின் போது, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் ஆய்வாளர் சாம்சன் மற்றும் போலீஸார் தீவிரவாதி போல ஊடுருவிய மத்திய கமாண்டோ படை வீரர் அன்சாரை மடக்கி பிடித்தனர். சென்னையில் நேற்று மாலை வரை 4 பேர் பிடிபட்டனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி வரை (48 மணி நேரம்) நடத்தப்படுகிறது.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் அருகே கடலோர காவல் படையினர் நடத்திய ‘கடல் கவசம்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் வந்த 2 பேரை கடலோர காவல் படையினர் பிடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in