Published : 23 Jul 2022 07:11 AM
Last Updated : 23 Jul 2022 07:11 AM
சென்னை: சென்னையை அடுத்த மணலியில் 1,200 ஆண்டு பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணலி சாத்தாங்காடு பகுதியில் உள்ள இரும்பு, எஃகு குடோனில் பழங்கால நடராஜர் சிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தி, சுமார் 4.5 அடிஉயரம் உள்ள ஐம்பொன் நடராஜர் சிலையை கைப்பற்றினர்.
இதுகுறித்து டிஜிபி ஜெயந்த் முரளி கூறியதாவது: சுமார் 1,200 ஆண்டு பழமையான ஐம்பொன் நடராஜர் சிலை, சோழர் காலம் அல்லது பல்லவர் - சோழர்களின் மாறுதல் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இதன் மதிப்பு ஊகிக்க முடியாத அளவுக்கு பல கோடி இருக்கும்.
தமிழகத்தின் ஏதோ ஒரு கோயிலில்இருந்து இதை திருடியுள்ளனர். பெரிதாக, கனமாக இருந்த சிலையை நேர்த்தியாக பிடுங்க முடியாமல், அடிப்பகுதியை துண்டித்து பின்னர் இரும்பு, எஃகு மூலம் அடித்தளத்தை சீரமைத்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐம்பொன் சிலை நெய்வேலி நடராஜர் கோயிலில் உள்ளது. இது சுமார் 12 அடிஉயரம், 1.25 டன் எடை கொண்டது. 9 அடி கொண்ட 2-வது உயரமான நடராஜர் சிலை, மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் இருப்பதாக நம்பப்படுகிறது. 2018-ல் அதிராம்பட்டினத்தில் நிலம் தோண்டியபோது 4.5 அடிஉயர நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதுவும், தற்போது கிடைத்திருப்பதும் ஆசியாவின் 3-வது மிகப்பெரிய சிலையாக இருக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிலை சிக்கியது எப்படி?
கடந்த 2017-ல் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்த பெண் ஒருவர் இந்த நடராஜர் சிலையை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல இந்திய தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று கேட்டு இடைத் தரகர் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
பழமையான சிலை என்பதால் வெளிநாடு கொண்டு செல்ல அனுமதி இல்லைஎன அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண்ஜெர்மனிக்கு சென்றார். இந்த நிலையில்தான் அந்த சிலை தற்போது எங்கு உள்ளதுஎன அதிகாரிகள் விசாரணை நடத்தி, சாத்தாங்காட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது நடராஜர் சிலையை வைத்திருந்த பார்த்திபன் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT