Last Updated : 23 Jul, 2022 06:33 AM

 

Published : 23 Jul 2022 06:33 AM
Last Updated : 23 Jul 2022 06:33 AM

கள்ளக்குறிச்சி | தீயில் சேதமான பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் நடத்துவது சாத்தியமா?

கள்ளக்குறிச்சி: மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, தீக்கிரையான சின்னசேலம் தனியார் பள்ளிக் கட்டிடத்தில் மாணவர்களைக் கொண்டு மீண்டும் வகுப்புகளை நடத்த இயலாதநிலை உள்ளது.

சின்னசேலம் தனியார் பள்ளியில் மெட்ரிக் பிரிவுக்காக 113 வகுப்பறைகளை கொண்ட ஒரு பெரிய கட்டிடம், சிபிஎஸ்இ பிரிவுக்காக 40 வகுப்பறைகளைக் கொண்ட மற்றொரு கட்டிடம் என இரு கட்டிடங்கள் உள்ளன. இங்கு சுமார் 3,200 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 250 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி மதி சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்ததால், கடந்த 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி,பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு,பள்ளிக் கட்டிடங்களுக்கு தீ வைப்புஉள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

பள்ளிக் கட்டிடங்களுக்கு தீவைப்பு சம்பவத்தால் பள்ளியின் அனைத்து வகுப்பறைக் கட்டிடங்களும் தீயில் சேதமடைந்தன. இதில் வகுப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி, மின்இணைப்புக் கம்பிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அனைத்தும் 5மணி நேரம் தீயில் பலத்த சேதமடைந்தன.

தீயை அணைக்கவந்த தீயணைப்பு வாகனங்களையும் போராட்டக்காரர்கள் மறித்து திருப்பி அனுப்பியதால், தீயின் வெப்பம் அதிகரித்து பள்ளிக் கட்டிடத்தின் மேல்பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுஉள்ளன. இதனால் பள்ளிக் கட்டிடங்களின் வெப்பம் அடுத்தடுத்த நாட்களிலும் நீடித்தது.

இந்த அசாதாரண சூழலில், இங்கு பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. பள்ளியை சுத்தம் செய்து, அதேகட்டிடத்தில் வகுப்புகள் நடத்த சாத்தியம் உள்ளதா என ஆய்வுசெய்து, அறிக்கை அளிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, பள்ளி வளாகத்தில் ஆய்வுசெய்து, அதன் தன்மைக் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த கட்டிட கட்டுமான ஒப்பந்ததாரர் ஜெனோ மாறனிடம் கேட்டபோது, செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டிடங்களில் 300 முதல் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தீயின் வெப்பம் இருந்தால் கட்டிடம் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் சில அதிர்வுகள் ஏற்படும் பட்சத்தில்தான் கட்டிடத்தின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும். மற்றபடி சாதாரண தீ விபத்தில் கட்டிடத்தின் உறுதித் தன்மை குலையாது” என்றார்.

கட்டிடத்தின் பல பகுதிகளில் வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள விரிசல், பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீக்கிரையான பள்ளியின் உறுதித் தன்மை குறித்து தெரியாததால், குழந்தைகளை எப்படி பள்ளிக்கு மீண்டும் அனுப்ப முடியும் என்று பெற்றோர் அச்சம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x