Published : 23 Jul 2022 07:13 AM
Last Updated : 23 Jul 2022 07:13 AM
மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியிலுள்ள ஜெயபாரத், கிளாட்வே சிட்டிபுரமோட்டர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 3-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். இதில் ரூ.70 கோடி ரொக்கம், நகை, சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களின் பேரில் ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணக்குமார், செந்தில் குமார் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவனியாபுரம், திருப்பாலை, விரகனூர் பகுதியிலுள்ள அவர்களது அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மதுரை மண்டல வருமான வரித் துறை புலனாய்வு ஆணையர் செந்தில்வேல் தலைமையில் டெல்லி, ஹைதராபாத், சென்னை, கோவைஆகிய நகரங்களில் இருந்து வந்த35-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து இச்சோதனையில் ஈடுபட்டனர்.
2-வது நாள் சோதனையின்போது ரூ.25 கோடி ரொக்கம், நகைகள், சொத்து ஆவணங்கள் சிக்கின. 3-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இதில் முருகனின் வீட்டில்இருந்து மட்டும் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் ரொக்கம், 3 கிலோவுக்கும் அதிகமான தங்கம் , வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள், ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக நடந்தசோதனையில் முருகன், அழகர், சரவணன் ஆகியோரது வீடுகளில் அதிகமான பணம், நகை, ஆவணங்கள் சிக்கியுள்ளதால் சென்னையில் இருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வரவழைத்து விசாரிக்கப்படுகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT