

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்துக்கிடையே, பள்ளியில் இருந்து பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் மீண்டும் பள்ளியிலேயே ஒப்படைக்கும்படி தண்டோரா போடப்பட்ட நிலையில், நேற்று முதல் அக்கிராம மக்கள் தூக்கிச் சென்ற பொருட்களை, பள்ளிக்கு அருகில் உள்ள கும்ப கொட்டாய் கோயில் பகுதியில் வைத்துவிட்டு செல்கின்றனர்.
கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. வன்முறைக் கும்பல் பள்ளி மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து, அடித்து நொறுக்கியது.
இந்த கலவரத்துக்கிடையே, கிராம மக்கள் சிலர் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த வகுப்பறைகளில் இருந்த இருக்கைகள், மின் விசிறிகள், ஏர்கூலர், ஏசி, கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை தூக்கிச் சென்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தூக்கிச் சென்றனர்.
பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பள்ளியின் உடைமைகளை தூக்கிச் சென்றவர்கள், போலீஸார் விசாரணைக்கு உள்ளாக நேரிடும் என்று மாவட்ட நிர்வாகத்தினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்தப் பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 20-ம் தேதி தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை பள்ளிக்கு அருகில் உள்ள கும்ப கொட்டாய் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கிராம மக்கள் வைத்து விட்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.
14 ஜோடி கம்மல்கள் ஒப்படைப்பு
கலவரம் நடைபெற்ற அன்று பள்ளியை ஒட்டியுள்ள சாலையில் 14 ஜோடி கம்மல்கள் கிடந்ததாகக் கூறி,சின்னசேலம் காவல்நிலையத்தில் நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த கம்மல்கள் பள்ளியில் இருந்து வன்முறையாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டதா அல்லது வேறு எங்கேனும், யாரேனும் திருடிய நகைகள் அங்கு போடப்பட்டதா என்ற சந்கேங்கள் எழுந்துள்ளன. சின்னசேலம் போலீஸார் நகையை ஒப்படைத்தவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.