

சென்னை/கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு அவரது பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதியின்படி, இன்று பெற்றுக்கொள்கின்றனர்.
இதற்காக கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனை மற்றும் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
அதில், தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதித்து, ஸ்ரீமதியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், ஸ்ரீமதியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் இயக்குநர் ஆகியோரை நியமித்து,உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதற்கிடையே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில். மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டது. ஆனால், ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.
நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா?
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை சமர்ப்பித்தார். அதைப் பார்த்த நீதிபதி, "நீதிமன்றம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?" என்று மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
"மகளை இழந்த பெற்றோருக்கு, இந்த நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்ரீமதியின் உடலைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு, "பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என்றார்.
அதற்கு நீதிபதி, "ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினை ஏற்படுத்துகிறீர்கள். இதற்கு அமைதியான முறையில்தான் தீர்வுகாண வேண்டும். மகளின் உடலை வைத்து, அவரது பெற்றோர் பந்தயம் கட்டக்கூடாது. மறு பிரேதப் பரிசோதனை தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவில், உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.
எனவே, இது தொடர்பாக இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப்போவதில்லை. நடந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். மாணவி மதியின் மரணம் மூலமாக வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அதுமனுதாரர் தரப்புக்குத் தெரியவில்லை.
ஒரு மாதத்தில் அறிக்கை
இது தொடர்பாக சமூக ஊடகங்கள் வதந்தியைப் பரப்பியுள்ளன. எனவே, மாணவி ஸ்ரீமதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை, ஜிப்மர்மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர் ஆய்வு செய்ய வேண்டும்.பாலியல் ரீதியான தாக்குதல் இருந்தால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வருமா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு, ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இறந்த மாணவி ஸ்ரீமதியின் உடலைப் பெற்று, கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். ஸ்ரீமதியின் ஆன்மா இளைப்பாறட்டும். மகளின் உடலைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக தகுந்த பதிலை அளிக்காவிட்டால், இந்த நீதிமன்றமே தக்க உத்தரவைப் பிறப்பிக்கும்" என்று கூறி, விசாரணையை மதியம் 12 மணிக்குத் தள்ளிவைத்தார்.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீமதியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரதுபெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளை (இன்று) காலை7 மணிக்குள் பெற்று, மாலை 6மணிக்குள் இறுதிச் சடங்கை அமைதியான முறையில் நடத்திமுடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
பெற்றோர் தரப்பில் உறுதி
இதையடுத்து நாளை (இன்று) காலை 7 மணிக்குள் மாணவியின் உடலைப் பெற்று, காலை 11 மணிக்குள் அடக்கம் செய்து விடுவதாக பெற்றோர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் வரும் பட்சத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கள்ளக்குறிச்சி மருத்துவமனை, கனியாமூர் பள்ளி வளாகம் மற்றும் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து பெரியநெசலூர் வரைக்கும் மற்றும் சிறுபாக்கம் என்ற ஊரில் இருந்து விளம்பாவூர் வரைக்கும் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில், 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உடலை எடுத்துச் செல்லும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து நைனார்பாளையம் பகுதி வரையில் தற்போதுள்ள போலீஸ் பாதுகாப்பு கூடுதல்படுத்தப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகவலன் தெரிவித்துள்ளார்.