தமிழகத்தில் முதல்முறையாக மடிக்கணினியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வெழுதி 91.40% மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவி

மாணவி ஓவியா
மாணவி ஓவியா
Updated on
1 min read

கோவை: தமிழகத்தில் முதல்முறையாக கோவையைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, உதவியாளர் இல்லாமல் மடிக்கணினியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வெழுதி 91.40 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பொறியாளராக பணியாற்றி வருபவர் ஏ.விஜயராஜ். இவரது மனைவி எம்.கோகிலா. இவர்களது மகள் ஓவியா, நான்கு வயதாக இருக்கும்போது, அவரது பார்வைத்திறன் படிப்படியாக குறைந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

6-ம் வகுப்பு பயிலும்வரை குறைந்த பார்வைத்திறனோடு எழுதிவந்த ஓவியா, ஏழாம் வகுப்பு பயிலும்போது பார்வைத்திறனை முற்றிலும் இழந்துள்ளார். இருப்பினும், மனம் தளராத ஓவியாவின் பெற்றோர், தொழில்நுட்ப உதவியுடன் மகளுக்கு கல்வி புகட்ட முடிவு செய்தனர்.

மடிக்கணினியில் ‘ஸ்கிரீன் ரீடர்' மென்பொருள் உதவியுடன்,பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை ஒலி வடிவில் கேட்டு, கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கத் தொடங்கினர். அதோடு, வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடக்குறிப்புகளை கேட்டு மடிக்கணினியில் குறிப்பெடுக்கவும், கீபோர்டை திறம்பட கையாளவும் கற்றுக்கொடுத்தனர்.

இதையடுத்து, பள்ளி தேர்வுகளின்போது வினாக்களை படிக்க மட்டும் உதவியாளரை வைத்துக்கொண்டு, பதிலை கீபோர்டு உதவியுடன் கணினியில் எழுதி வந்துள்ளார் ஓவியா. அதன்பலனாக, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உதவியாளர் துணையின்றி தமிழகத்தில் முதல்முறையாக கணினியில் தேர்வெழுதி 500-க்கு 447 மதிப்பெண்கள் (89.40 சதவீதம்) பெற்ற ஓவியா, நேற்று வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 500-க்கு457 மதிப்பெண்கள் பெற்று அசத்திஉள்ளார்.

கரோனா காலத்தில் சிரமம்

இந்த வெற்றி குறித்து ஓவியாவின் தந்தை விஜயராஜ் கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்த கார்த்திக் ஷகானி என்ற பார்வைத்திறன் மாற்றுத் திறனாளி மாணவர் கணினி உதவியுடன் சிபிஎஸ்இ தேர்வு எழுதியதை அறிந்தோம். அதைப்பார்த்து ஓவியாவுக்கும் அதேபோல பயிற்சி அளிக்கத் தொடங்கினோம்.

நெய்வேலியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில்தான் 10-ம் வகுப்பு வரை ஓவியா பயின்றார். அதன்பிறகு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் வணிகவியல் பாடப்பிரிவு இல்லாததால், கோவை கணுவாயில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் பிளஸ் 1-ல்சேர்த்தோம்.

கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்போது ஓவியா சிரமப்பட்டார். அதையும் தாண்டி அவர் சாதித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து, பி.காம். சிஏ படிப்பில் ஓவியாவை சேர்க்க முடிவு செய்துள்ளோம். குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதே ஓவியாவின் எண்ணம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in