

சென்னை: உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள், உணவுப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
பின்னர், ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரிசிக்கு இதுவரை எந்த அரசும் வரி விதித்தது கிடையாது. பாஜக அரசுதான் 5 சதவீதம் வரி விதித்துள்ளது. இதேபோல, பால், இரும்புப் பொருட்களுக்கும் வரியை அதிகரித்திருக்கிறது. இதனால் அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரி உயர்வை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
வரும் 26-ம் தேதி போபாலில் அனைத்து இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பல்வேறு போராட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அடுத்தகட்டமாக விரைவில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதேபோல, செஸ் வரியை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட பேரமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.