

சென்னை: திரைப்படங்களில் இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை திரைப்படப் பின்னணி பாடகர்கள் பாடும் இசைக் கச்சேரி சென்னையில் இன்று நடக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதால் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசின் செய்தித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாகவி பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையிலான 14 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில், “திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் வகையில், ‘திரையில் பாரதி’ என்ற இசைக்கச்சேரி விழா கொண்டாடப்படும் என்ற அறிவிப்பும் அடங்கும்.
அதனை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் செய்தித்துறையின் சார்பில் இன்று (ஜூலை 23) மாலை 6 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குழுவினரால் ‘திரை இசையில் பாரதி’ எனும் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
பாரதியாரின் பாடல்களை, முன்னணிப் பாடகர்கள் பாடும் இந்த இசை நிகழ்ச்சியை பொது மக்கள் முற்றிலும் இலவசமாகக் கண்டும் கேட்டும் மகிழ உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.