Published : 23 Jul 2022 07:29 AM
Last Updated : 23 Jul 2022 07:29 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகைதர உள்ளனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆக. 10 வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போட்டிகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒலிம்பிக் சுடர், நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில் 75 நகரங்களுக்குச் செல்கிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்குச் சென்று, வரும் 27-ம் தேதி மாமல்லபுரம் வருகிறது. அன்றை தினம் மாலை மெரினா கடற்கரைக்கு ஒலிம்பிக் சுடர் வந்து சேர உள்ளது.
மேலும், செஸ் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் இன்று முதல் (சனிக்கிழமை) சென்னைக்கு வருகைதர உள்ளனர். வெளிநாட்டு வீரர்களை தமிழக கலாச்சாரப்படி சிறப்பாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வீரர்கள் தங்கும் விடுதிகளில் நியமிக்கப்படும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் பரிசோதனை மேற்கொண்ட பிறகே உணவுகளை வழங்க அனுமதியளிப்பார்.
மேலும் தமிழர்களின் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் 47 வகையான பாரம்பரிய உணவுகள் மற்றும் தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. உயர் அதிகாரிகள் உட்பட 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுதவிர 7 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வரும் 24-ம் தேதி தமிழக சதுரங்க வீரர்களை கொண்டு மாமல்லபுரத்தில் பயிற்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆக. 2, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
வீரர்கள் அரங்கத்துக்கு வந்து செல்லும் நேரங்களில் மட்டும் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் சிறியளவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT