Published : 23 Jul 2022 06:26 AM
Last Updated : 23 Jul 2022 06:26 AM

சொத்து சேர்ப்பதைவிட நோயாளியாக இருக்கக் கூடாது: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகரவாழ்வு தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவு மற்றும் யோகதா சத்சங் சொஸைடி ஆஃப் இந்தியா சார்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி, நடிகர் ரஜினிகாந்த்,சுவாமி பவித்ரானந்த கிரி ஆகியோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

சென்னை: சொத்து சேர்ப்பதை விட நோயாளியாக இல்லாமல் இருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சார்பில் ‘கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு’ எனும் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் மூத்த சந்நியாசிகளான சுவாமிகள் சுத்தானந்த கிரி, பவித்ரானந்தா கிரி ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

மேலும், இயக்குநர் சந்திரசேகர் உள்ளிட்ட திரையுல பிரபலங்கள், ஆன்மிகவாதிகள், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா இயக்கத்தினர், பொதுமக்கள், ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் வரலாறு குறித்தும் கிரியா யோகாவின் சிறப்புகள் மற்றும் அது தொடர்பான ஆன்மிக சொற்பொழிவையும் சுத்தானந்த கிரி, பவித்ரானந்தா கிரி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆன்ம - அனுபூதிக்கான யோகதா சத்சங்கப் பாட நூலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உடல் ஆரோக்கியம், அறிவு, மனதை ஒருநிலைப்படுத்துவதுதான் மனிதனுக்கு முக்கியம். இதற்கு நல்ல உணவுகளை உண்டு, நல்ல தியானமும் செய்து, நல்ல புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்துகளை சேர்த்து வைத்து செல்வதை விட, நோயாளியாக இல்லாமல் செல்வது மிகமுக்கியம். நாம் நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டம் ஏற்படும். எனவே, உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் அவசியம்.

கிரியா யோகாவை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் அதிகமாக பயிற்சி செய்து வருகிறேன். அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும். அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட யோகதா சத்சங்கப் பாட நூலை, விண்ணப்பப் படிவம் மூலமாகவும், ysslessons.org என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து மக்கள் வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x