நாமக்கல் | கொல்லிமலையில் பாஜக பயிற்சி முகாம்: மலைவாழ் மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்
நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி பயிற்சி முகாமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். முன்னதாக மலைவாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பாஜக சார்பில் 3 நாள் இளைஞர் அணி பயிற்சி முகாம் நடக்கிறது. இதை தொடங்கி வைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அகில இந்திய இளைஞரணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் நேற்று கொல்லிமலை வந்தனர். அப்போது, கொல்லிமலையில் மலைவாழ் மக்களிடையே அண்ணாமலை கலந்துரையாடினார்.
அப்போது, “நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறைந்த நாட்களே வேலை கிடைப்பதாகவும், கூலி குறைவாகக் கிடைப்பதாகவும்” மக்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “100 நாள்வேலைத்திட்டத்தில் கூடுதல் நாட்கள் பணி வழங்கவும், அரசு நிர்ணயம் செய்த கூலியைவழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“கொல்லிமலை பகுதியில் தடையின்றி செல்போன் சிக்னல் வசதி கிடைக்கும் வகையில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும்” என அண்ணாமலையிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
மலைவாழ் மக்கள் வழங்கிய பாரம்பரிய உணவு வகைகளை, அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாஜக இளைஞர் அணி பயிற்சி பாசறையை அண்ணாமலை தொடங்கி வைத்து பேசினார்.
