

திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மே 5-ம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து நேற்று சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மே 5-ம் தேதி சென்னைக்கு வருகிறார். மாலை 6 மணியளவில் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் கூட்டணி கட்சித் தலைவர் கருணாநிதி மற்றும் தோழமைக் கட்சி தலைவர்களுடன் சோனியா ஒரே மேடையில் பேசுகிறார். இதே மேடையில், 22 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஆதரவு திரட்டுகிறார்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எஸ்பி சர்மா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் நேற்று சென்னைக்கு வந்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, மைதானம், தலைவர்கள் வருகை தரும் பாதை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். சிறிதும் குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தமிழக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்துக்கு கட்சியினரை திரளாக கலந்துகொள்ளச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், சேகர் பாபு, காங்கிரஸ் கட்சி சார்பில் நாசே ராமச்சந்திரன், ஆ.கோபண்ணா, எம்.ஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களிலிருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சியினரை மே 5-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.