

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வார்டு வாரியாக மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்களை தேடி நம்ம மேயர் என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் கடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி முதல் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல வரிவசூல் மையத்தில் நேற்று நடைபெற்றது. மேயர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர். ராஜு, மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கீதாராசையா, உலகநாதன், கந்தன், கமாலுதீன், உதவி ஆணையர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் குடிநீர், சாலை, கழிவு நீரோடை போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பித்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு கேட்டு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவி தொகைகள் கேட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி தெரிவித்தார். மேலும் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது. அத்துடன் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
வரிவசூல் மையம் அருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அழகநேரி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடம் அருகே பழுதான நிலையிலுள்ள நீர்த் தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் மேயர் ஆய்வு செய்தார்.
ஆனந்தபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேதமடைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைக்கவும் உத்தரவிட்டார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 142 மனுக்களில் 22 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு கேட்டு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. மேலும் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது.