Published : 23 Jul 2022 06:28 AM
Last Updated : 23 Jul 2022 06:28 AM

கோவில்பட்டி | அனுமதியின்றி போராட்டம்: பாஜகவினர் 42 பேர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறு வதாக கூறி, அதனை கண்டித்து சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து டிஎஸ்பி (பொ) சிவசுப்பு தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சுஜித் ஆனந்த், மங்கையர்கரசி மற்றும் ஏராளமான போலீஸார் நேற்று காலையில் சார் பதிவாளர் அலுவலகம் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். காலை 10.45 மணியளவில் பாஜகவினர் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு வந்தனர்.

பாஜக நகரத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில், வடக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி உடனடியாக கைது செய்ய முற்பட்டனர். பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது சிறிது சலசலப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நகர பொதுச்செயலாளர்கள் அசோக், விஜயகுமார் உட்பட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x