Published : 23 Jul 2022 06:04 AM
Last Updated : 23 Jul 2022 06:04 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் 68 வயது மூதாட்டிக்கு முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டாலும், திருப்பத் தூரில் உள்ள அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்திலேயே செயல்பட்டு வருகிறது.
திருப்பத்தூர், கந்திலி, ஏலகிரி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன்பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரி விக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மனையை, அரசு தலைமை மருத்துவமனையாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தாலும், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் குமரவேல் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பொன்னம்மாள் (68). இவரது வலது கால் முட்டி முழுவதும் தேய்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நடக்கக்கூட முடியாமல் படுக்கையில் கிடந்தார்.
மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டு வந்த பொன்னம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவரை முழுமையாக சோதனை செய்தபோது, அவரது வலது கால் முட்டி முழுவதும் தேய்மானமானது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து அறிவுறுத்தலின் பேரில், எனது தலைமையில், மயக்கவியல் மருத்துவர் சத்திய நாராயணன், எலும்பு முறிவு மருத்துவர்கள் செல்வநாதன், சிவக்குமார், பாஸ்கர், செவிலியர்கள் மைதிலி, காமராஜ் ஆகியோரின் கூட்டு முயற்சியால் பொன்னம்மாளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இன்று (நேற்று) மேற்கொள் ளப்பட்டது. அதில் பொன்னம்மாள் குணமடைந்து பூரண நலமுடன் உள்ளார்.
‘உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதச்செயல்’ என்ற குறளுக்கு ஏற்ப நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்கான நேரம் ஆகியவற்றை அறிந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சிகிச்சை மூதாட்டியின் மூட்டு வலிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது மருத்துவ குழுவினருக்கும், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.
இது போன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும். ஆனால், பொன்னம்மாளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது. முதல் முறையாக எங்களது இந்த முயற்சி வெற்றி பெற துணையாக இருந்த மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் பாராட்ட வேண் டியவர்கள்’’ என்றார்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT