Last Updated : 22 Jul, 2022 04:25 PM

 

Published : 22 Jul 2022 04:25 PM
Last Updated : 22 Jul 2022 04:25 PM

“சாராய ஆறு இனி சாராய கடல் ஆகும்” - புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு நாராயணசாமி எதிர்ப்பு

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “தமிழகத்தைச் சேர்ந்தோர் மதுபான ஆலைகள் தொடங்க புதுச்சேரியில் அனுமதி பெற்று இருப்பதால் சாராய ஆறு இனி கடலாகும்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: "புதிதாக தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசியல் சட்டப்படி செயல்பட்டு, ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டார் என்றும் நம்புகிறேன்.

மக்களின் அன்றாட தேவையான அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர். இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏற்கப்பட்டே வரி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலில் பாஜக-வினர்களை மெஜாரிட்டி உறுப்பினர்களாக இருப்பதால்தான் வரி விதிப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.

ஏனாமில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முதல்வர் ரங்கசாமி நேரில் செல்லவில்லை. ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி தேர்தலில் தோல்வியடைந்ததால் அந்த மக்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, நேரில்கூட செல்லாமல் தவிர்க்கிறார் என சந்தேகம் எழுகிறது. அதேநேரத்தில் சூப்பர் முதல்வராக செயல்படும் ஆளுநர் தமிழிசை ஏனாம் சென்று நிவாரணங்களை அறிவித்துள்ளார். புதுச்சேரியில்தான் ஏராளமான முதல்வர்கள் இருக்கிறார்கள்.

சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசையும், டம்மி முதல்வராக ரங்கசாமியு்ம். 3வது முதல்வராக பேரவைத் தலைவரும், ஒவ்வொரு அமைச்சரும் தனித்தனி முதல்வராகவும் வலம் வருகின்றனர்.

புதுவையில் தற்போது 5 மதுபான ஆலைகள் இயங்கி வருகின்றன. புதிய மதுபான ஆலைகள் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலர் மனு செய்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான ஆலைகளை நடத்துபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக ரூ.15 கோடி பேரம் பேசி கைமாறியுள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மதுபான ஆலைகள் தொடங்கினால் புதுவை சாராய கடலாக மாறிவிடும். புதுச்சேரியில் கொலை, கொள்ளை, பாலியல் தொழில், திருட்டு, ஆட்கடத்தல், நிலம், வீடு அபகரிப்பு தடையின்றி நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் மதுபான ஆலைகள், மதுக்கடைகளுக்கு கூடுதலாக அனுமதியளித்தால் குற்ற செயல்கள் மேலும் பெருகும். சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் வெடிகுண்டு வீச்சு படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பின் மூலம் காவல்துறை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x