

அரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சீரமைக்கக் கோரியும் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டன உயர்வை திரும்பப்பெற வேண்டும். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுத்துவதை சீரமைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும். 2020-21-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு பெற அறிவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் போது முந்திரி விவசாயிகளுக்கு கால தாமதப்படுத்தாமல் முந்திரி கன்றுகள் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். தொடர்ந்து ஆட்சியரிடம் அனைவரும் சென்று மனு அளித்து சென்றனர்.