

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் கடந்த ஏப்.21-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் அரசுக்கு அளித்தகடிதத்தில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை அமைக்கும் திட்டத்தில் ஆண்டுதோறும் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்துக்கு அவர்கள் செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, ஆவின் பொருள் கொள்முதலுக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தில் பயனாளிகள் வாடகை செலுத்துவதால் ஏற்படும் இழப்பை தடுக்க, வாடகை, முன்பணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், முதல்வர் அறிவிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குநர், ஆவின் பாலகம் எந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறதோ அந்த துறையினர் வாடகையில் இருந்து விலக்களித்து ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் பாலகம்அமைக்க ஆவின் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், பாதுகாப்பு தொகையின்றி உரிமம்வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசு உத்தரவு
இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் வாடகை விலக்களிக்கும் பட்சத்தில், ஆவின் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை இல்லாமல் உரிமம் வழங்கவும் முடிவெடுத்து அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.