Published : 22 Jul 2022 06:58 AM
Last Updated : 22 Jul 2022 06:58 AM
சென்னை: தமிழக அரசு சார்பில் திருச்சி மற்றும் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடிமதிப்பீலான 4 லட்சம் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டம் மற்றும் வாடகைத் தாய்சட்டம் தொடர்பாக இணை இயக்குநர்களுக்கான கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அரசு மருத்துவர்களுக்கான பணிமூப்பு பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை கட்டுப்படுத்த மற்றும் அதன் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு, செயற்கை இனப்பெருக்க நுட்பங்கள் சட்டம், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம், கருத்தரிப்பு முன் மற்றும் பிறப்புக்கு பின் நோய்களைக் கண்டறியும் நுட்பங்கள் என்ற சட்டம்உள்ளிட்ட 3 சட்டங்களின் தேவைகள் மற்றும் அவற்றின் தாக்கம், சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஸ்கேன் மையங்களுக்கு சீல்
தமிழகத்தில் செயற்கை கருத்தரித்தல் முறைகேட்டில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகள் மீது கடந்தவாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ளசுதா மருத்துவமனைகள், பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையங்களுக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டன.
அதேபோல் ஈரோடு, சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் ஆகிய 2 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தி கொண்டிருக்கும் ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே முறைகேட்டில் ஈடுபட்டதிருப்பதியில் இருக்கும் ஒருமருத்துவமனை, திருவனந்தபுரத்தில் இருக்கும் மற்றொரு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் மூலம் அந்தந்த மாநில அரசின்சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 190 செயற்கை கருத்தரித்தல் மையங்களில் பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகள் மற்றும் சட்டக்குறிப்புகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை அனைத்து மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நடைபெறும்முறைகேடுகள், விதிமீறல்களை கட்டுப்படுத்த, திருச்சி மற்றும் சென்னையில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்க இருக்கிறோம். குரங்கம்மையைப் பொறுத்தவரை கேரளா மற்றும் தமிழ்நாட்டையொட்டி 13 எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, கோவை,திருச்சி மற்றும் மதுரைக்கு வரும்வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
பதில்கள் தயாரிப்பு
இதுவரை குரங்கம்மைக்கான பாதிப்புகள் தமிழகத்தில் இல்லை. நீட் விலக்கு மசோதா குறித்த மத்திய அரசின் கேள்விக்கு, சட்ட வல்லுநர்கள் மூலம் பதில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் முதல்வரின் அனுமதி பெற்று மத்திய அரசுக்கு, அவை அனுப்பப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மருத்துவர் உமா, மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அனைத்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT