

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ளசிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
டெல்லியில் பதிவான வழக்குதொடர்பாக விசாரணை மேற்கொள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், திருச்சி, சென்னை உட்பட 22 இடங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 58 செல்போன்கள், 63 சிம்கார்டுகள் மற்றும்ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முகாமில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களான குணசேகரன், கென்னடி பெர்ணாண்டோ, பூங்கொடி கண்ணன், திலீபன், முகமதுரிகாஷ் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னை அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநர் அஜய்கபூர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் முகாமில் உள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அங்குள்ள நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய குணசேகரன், கென்னடி பெர்ணாண்டோ, பூங்கொடி கண்ணன், கோட்டக் காமினி, வெள்ள சுரங்கா, தனுகாரோஷன் மற்றும் பெண் முகாமில் உள்ள இலங்கையைச் சேர்ந்த பாத்திமா ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.