

கோயில்களுக்கு அருகிலுள்ள இறைச்சிக் கடைகளை அகற்றா விட்டால் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி சார்பில் இந்து உரிமை மீட்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்து உரிமை மீட்பு பிரச்சார பயணம், கடந்த மாதம் 28-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு உரிமைகள் மறுக்கப் படுகின்றன.
இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுக்கப்படுகிறது. தமிழகம் முழுக்க உள்ள 90 சதவீதம் கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இதை உடனே நிறை வேற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளது.
இந்நிலையில், கோயில் நிலங்களை மீட்பதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பொய்யான தகவலை கூறி வருகிறார். மன்னார்குடி, திருச்செந்தூர், தாராபுரம் உட்பட தமிழகம் முழுவதும் 4.75 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் மலையில் சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படும் உத்தாண்ட வேலாயுதசுவாமி கோயிலுக்கு 1,500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், அந்த கோயிலுக்கு தினமும்பூஜை செய்ய பணம் இல்லை. இதுபோல பல கோயில்களின் நிலை உள்ளது.
அதேபோல, கோயில் களுக்கு அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக கோயில்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி வருமானம் கிடைப்பதாக தெரிகிறது. இந்த வருமானத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். கோயில்களின் வருமானத்தில் பெரிய ஊழல் நடக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட தலைவர் கலைகோபி, நகர தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.