Published : 22 Jul 2022 06:01 AM
Last Updated : 22 Jul 2022 06:01 AM

ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில் ஒருநாள் தொகுப்பு சுற்றுலா: சென்னையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

சென்னை: ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அம்மன் கோயில்களை பொதுமக்கள் தரிசிக்கும் வகையில், 2 ஒருநாள் அம்மன் கோயில் தொகுப்புசுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 2 வகை சுற்றுலாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் சுற்றுலாவில், சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திலிருந்து, பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருமுல்லைவாயில் திருவுடையம்மன் கோயில், பச்சையம்மன் கோயில், கொரட்டூர் செய்யாத்தம்மன் கோயில், வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் ஆகிய கோயில்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.900 ஆகும்.

இரண்டாவது சுற்றுலாவில், சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், முண்டகக் கண்ணியம்மன் கோயில், கோலவிழியம்மன் கோயில், தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில், தி.நகர் முப்பாத்தம்மன் கோயில், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன் கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில் ஆகிய கோயில்களை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில் மதிய உணவு, கோயில் பிரசாதம், சிறப்பு விரைவுதரிசனம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான கட்டணமாகரூ.700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவுக்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x