

திமுக ஆட்சியின்போது வளர்ச்சி யில் முதல் இடத்தில் இருந்த தமிழகத்தை கடைசி இடத்துக்கு ஜெயலலிதா அரசு கொண்டு சென்றுவிட்டது என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்குக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டார். அவர் பேசியதாவது:
இந்த ஆட்சி, எந்தெந்த வகையில் கேடு செய்ய முடியுமோ அனைத்து வகையிலும் கேடு செய்துள்ளது. எவ்வளவு கோடி கொள்ளை, அவை அனைத்தும் எங்கு போய் இருக்கிறது என்பதை பத்திரிகைகளை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
கரூரில் அதிமுகவை சேர்ந்த அன்புநாதன் வீட்டிலிருந்து ரூ.500 கோடி பணம் எடுக்கப் பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரு பொறுப்பில் இருந்து வரும் அவர், அமைச்சர்களை அழைத்துக்கொண்டு சென்று அவ்வப்போது விருந்து வைப்பதற்காக மடகாஸ்கருக்கு அருகில் பெரிய தீவை விலைக்கு வாங்கியுள்ளார். அங்கு, அமைச்சர்கள் சென்று மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவையான பல விதமான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அவரது வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டது ரூ. 500 கோடி என்றால் அதற்கும் மேலாக ரூ. 1500 கோடி அளவுக்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. ஆனால், இந்த மத்திய, மாநில அரசுகள் ரூ. 500 கோடிக்குத்தான் கணக்கு காட்டியுள்ளனர். கரூரில் எடுத்த பணத்தை ஏன் மக்கள் அறிந்துகொள்ளச் செய்யவில்லை. இந்த ஆட்சி நடக்கலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தொழில் நகரமான கோவை, திருப்பூருக்கு மான்செஸ்டர் என்று பெயர். ஆனால், இந்த 5 ஆண்டு ஆட்சியில் தொழில்கள் நசிந்துள்ளன. நான்கு மடங்கு தொழில் ஒரு மடங்காக நசித்து விட்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது எல்லா மாநிலங்களும் முன்னேறியுள்ளன. ஆனால், தமிழ்நாடு கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த முதல்வர் திறமைசாலியாக இருந்திருந்தால் பல தொழில்களை தொடங்கி இருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லை. இந்த அரசுக்கான அறிவு அவ்வளவுதான். அதனால்தான் தொழில்கள் பட்டுப்போய்விட்டன என்றார்.