Published : 22 Jul 2022 07:59 AM
Last Updated : 22 Jul 2022 07:59 AM
மாமல்லபுரம்/காஞ்சி/செங்கை: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை நேற்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
வாகன நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டுநர் ஓய்வு அறை, தற்காலிக கழிவறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் அறிவுறுத்தினார்.
சாலைகள் சீரமைப்பு
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: முன்னேற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் விமான நிலையத்திலிருந்து ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகள் வழியாக வர உள்ளனர்.
அதனால், மீனம்பாக்கத்திலிருந்து பல்லாவரம், துரைப்பாக்கம் மற்றும் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளை சீரமைத்து. நீரூற்றுகள் அமைத்து அழகுப்படுத்தும் பணிகள் மற்றும் மாமல்லபுரம் நகரப்பகுதியில் உள்ள சாலைகளின் பக்கவாட்டு பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதித்து அழகுப்படுத்தும் பணிகள் எனரூ.53 கோடியில் பணிகள் நடக்கின்றன.
மேலும், 5.45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் 100 பேருந்துகள் மற்றும் 50 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சீரான மின்சார விநியோகத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 2 நாட்களில் 100 சதவீதம் நிறைவடையும்.
முன்னதாக, அரங்கில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளா் சுஜாதா சதுா்வேதி பார்வையிட்டார். முன்னேற்பாடுகள் குறித்து விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் அபூர்வாவிடம் கேட்டறிந்தார். அப்போது சிறப்பு அலுவலர் சங்கர், ஆட்சியா் ஆ.ர. ராகுல்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மாரத்தான் ஓட்டம்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பதை முன்னிட்டு செங்கல்பட்டில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஒட்டம் நடந்தது. இதனை செங்கல்பட்டு டிஆர்ஓ மேனுவல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் புனித தோமையார்மலை வட்டாரத்தின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் காய்கறிகள் பூக்கள் கோலப் பொடியை பயன்படுத்தி ரங்கோலி வரையப்பட்டது. இதனை மேயர் க.வசந்தகுமாரி, ஆணையர் மா.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதேபோல் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ பாலாஜி, ஒன்றிய தலைவர் இதயவர்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் பள்ளியில் நடந்த வட்டார அளவிலான செஸ் போட்டியை பேரூராட்சி தலைவர் தேவராஜ் தொடங்கி வைத்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
செஸ் போட்டிகளை முன்னிட்டு திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து காலவாக்கம் வரையிலான ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் செங்கல்பட்டு மாமல்லபுரம் சாலை ஆக்கிமிப்புகளையும் அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலக்கெடு முடிந்தும் அகற்றப்படாததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மனித சதுரங்கம்
சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் திருப்பாச்சூரில் உள்ள கல்லூரியில் மனித சதுரங்கப் போட்டி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT