

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது மத்திய பாஜக அரசின் மலிவான பழி வாங்கும் நடவடிக்கை என்றுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டிஉள்ளார்.
நேஷ்னல் ஹெரால்டு நிறுவன பங்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. இதைத் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசியதாவது:
விடுதலைப் போராட்ட காலத்தில் 1938-ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் நேஷ்னல் ஹெரால்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. நிர்வாகத்தை சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘யங் இந்தியா நிறுவனம்' குறித்து பாஜக அரசின் அமலாக்கத்துறை, சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும், பழிவாங்கும் நோக்குடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல்காந்தி கடந்த ஜூன் 13 முதல் 17-ம் தேதிவரை 5 முறை ஆஜராகி 40 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதேபோல, அண்மையில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வெடுத்து வரும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இன்று விசாரணையும் நடத்தியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறாத நிலையில், பண மோசடி வழக்கு என்பது பாஜகவின் மலிவான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
இதேபோன்று பாஜக அரசுக்கு எதிராக செயல்படும் மாநில அரசுகளை நசுக்கும் செயல்களிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு நசுக்கிவிட்டால், அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு கிடைத்துவிடும் என பாஜக கணக்குபோடுகிறது. காங்கிரஸ் இருக்கும்வரை அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்சி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் ரூபிமனோகர், விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், ராதாகிருஷ்ணன், அசன் மவுலானா, கவுன்சிலர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்,திரவியம், டில்லிபாபு, மகளிரணி தலைவர் சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.