Published : 22 Jul 2022 06:31 AM
Last Updated : 22 Jul 2022 06:31 AM

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட பழனிசாமிக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழ் மகன் உசேன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை 4-வது பெருநகர உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் உறுப்பினராக பதவிவகித்து வருகிறேன்.

எனக்கு பொதுச்செயலாளர் கையொப்பமிட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர். குறிப்பாக அடிமட்டத் தொண்டர்களின் வாக்குரிமையை பறித்தனர்.

அந்த வாக்குரிமையை மீண்டும்பெறவே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவேகடந்த ஜூலை 11-ம் தேதி ஒற்றைதலைமை தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல, கடந்த ஜூலை 11-ம் தேதிநடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமிதேர்வு செய்யப்பட்டு இருப்பதும்சட்டவிரோதமானது. ஏனெனில்,இந்த நியமனம் கடந்த 1972-ம்ஆண்டு கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின்விதிமுறைகள் மற்றும் தொண்டர்களால் வாக்களித்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதாவால் கடந்த 2007-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட கட்சி விதி 20 உட்பிரிவு 2 மற்றும் விதி 43-க்கு எதிரானது. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை நியமனம் செய்ய பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாக்குரிமையை கடந்த 2017 மற்றும் 2022 என பொதுக்குழு இரண்டு முறை பறித்துள்ளது. எனவே இதுதொடர்பான பிரதான வழக்கு முடியும் வரை கடந்த ஜூலை11 அன்று பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பழனிசாமி அதிமுகவில் எந்தவொரு உத்தரவுகளையும் பிறப்பிக்கவோ அல்லது பதவி நியமனம் செய்யவோ அல்லது பதவி நீக்கம்செய்யவோ அல்லது கட்சி சார்ந்தவேறு ஏதேனும் செயல்பாடுகளைச் செய்யவோ கூடாது என தடைவிதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பிரியா, இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுகவின் முன்னாள் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.16-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x